இந்தியா

“நான் முஸ்லிம் அல்ல, ஆனாலும் போராடினேன்; பாதுகாப்பாக உணர முடியவில்லை” : ஜாமியா மாணவி கண்ணீர் மல்க பேட்டி

"இன்று நடக்கும் சூழலுக்கு பயந்து, உண்மைக்கு துணை நிற்கவில்லை என்றால் என் படிப்பு எனக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல" என ஜாமியா பல்கலைக்கழக மாணவி தெரிவித்துள்ளார்.

“நான் முஸ்லிம் அல்ல, ஆனாலும் போராடினேன்; பாதுகாப்பாக உணர முடியவில்லை” : ஜாமியா மாணவி கண்ணீர் மல்க பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது மாணவர்களை ஒடுக்க போலிஸார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த போலிஸார் மற்றும் துணை ராணுவ படையினர் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், போராட்டத்தின் போது வளாகத்தில் இருந்த மாணவர்களை டெல்லி போலிஸாரும், துணை ராணுவ படையினரும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கைது செய்து காவல் நிலையத்தில் அடைத்து வைத்துள்ளனர். இதனையடுத்து மாணவர்களுக்கு ஆதரவாக நாடுமுழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் போலிஸாரின் அடக்குமுறை குறித்து பல்கலைக்கழக மாணவி ஒருவர் ஊடகத்திற்கு கண்ணீர் மல்க பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், “போராட்டம் ஒரு திசையில் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் அமைதியான முறையிலேயே பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்தோம்.

திடீரென வந்த போலிஸார் மிருகத்தனமாக எங்கள் மீது தாக்குதல் நடத்தினார். வளாகத்திற்குள் நுழைந்த போலிஸ், உணவகம், நூலகம் மற்றும் பெரும்பாலான வகுப்பறைகளை சேதப்படுத்தினர்.

அதுமட்டுமின்றி, வளாகத்திலிருந்த மசூதியில் சில மாணவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களையும் அங்கிருந்து அடித்து விரட்டினார்கள். தங்களை பாதுகாத்துக்கொள்ள பல மாணவர்கள் அச்சத்தில் பதுக்கிருந்த சம்பவம் மிகவும் பயங்கரமானது.

“நான் முஸ்லிம் அல்ல, ஆனாலும் போராடினேன்; பாதுகாப்பாக உணர முடியவில்லை” : ஜாமியா மாணவி கண்ணீர் மல்க பேட்டி

நான் கண்ட காட்சிகள் மேலும் என்னை வருத்தம் அடைய செய்ய செய்கிறது. தாக்குதல் நடத்துவதற்கு முன்பே வளாகத்தில் இருந்த விளக்குகளை அணைத்துவிட்டனர். அப்போது பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவங்கள் நடைபெறும் சிறிது நேரத்திற்கு முன்புதான், வளாகம் மிகவும் பாதுகாப்பான இடம், அங்கிருந்தால் எந்த அசம்பாவிதமும் நடக்காது என நினைத்திருந்தோம்.

ஆனால் அது பொய் என போலிஸாரே நிருப்பித்துவிட்டனர். நேற்று அழுதோம்., இப்போதும் அழுகிறோம். இங்கு என்னதான் நடக்கிறது. எதுவும் விளங்கவில்லை. அதனால் தான் பாதுகாப்பில்லாமல் உணர்கிறோம்.

ஏன் மொத்த நாட்டிலும் நான் பாதுகாப்பாக இருப்பதாக உணரவில்லை. நாளைக்கு என்னுடன் படித்த பல நண்பர்கள் இந்தியக் குடிமக்களாக இருப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது.

நான் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த பெண் அல்ல. இருந்தும் என் நண்பர்களுக்காக போராடுகிறேன். இன்று நடக்கும் சூழலுக்கு பயந்து, உண்மைக்கு துணை நிற்கவில்லை என்றால் என் படிப்பு எனக்கு எந்த வகையிலும் ஏற்றதல்ல” என அழுதுக்கொண்டே தனது பேட்டியை நிறுத்தினார்.

banner

Related Stories

Related Stories