குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக மாணவர்களும், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் போலிஸார் மற்றும் துணை ராணுவப் படையினரை ஏவி மாணவர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக அரசு.
இந்த வன்முறை நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். ஜாமியா மாணவர்கள் மீதான வன்முறைக்கு எதிராக பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வரும் நடிகர் சித்தார்த், தற்போது ஜாமியா மாணவர்கள் மீதான வன்முறை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “அவர்கள் இருவரும் கிருஷ்ணரும், அர்ஜுனனும் இல்லை. அவர்கள் சகுனி மற்றும் துரியோதன். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்துங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சென்னையில் நடந்த விழாவின்போது மோடி மற்றும் அமித்ஷாவை நடிகர் ரஜினிகாந்த், கிருஷ்ணரும், அர்ஜுனனும் போன்றவர்கள் என பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.