இந்தியா

“குடியுரிமை மசோதாவை எங்கள் மாநிலம் ஏற்காது” - பஞ்சாப், கேரள முதல்வர்கள் பகிரங்க அறிவிப்பு!

மம்தா பானர்ஜியை தொடர்ந்து குடியுரிமை மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என பஞ்சாப், கேரள அரசுகளும் பகிரங்கமாக அறிவித்துள்ளன.

“குடியுரிமை மசோதாவை எங்கள் மாநிலம் ஏற்காது” - பஞ்சாப், கேரள முதல்வர்கள் பகிரங்க அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம் என கேரளா மற்றும் பஞ்சாப் மாநில அரசுகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளன.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குடியேறும் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, மசோதாவாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்திருந்தார்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு இந்த சட்ட மசோதாவால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவோம் என உணர்ந்து வடகிழக்கு மாநில மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, குடியுரிமை சட்ட மசோதாவை நிறைவேற்றக்கூடாது என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தும் அதனை பா.ஜ.க அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்தமாட்டோம் என பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மதச்சார்பற்ற நாடாக உள்ள இந்தியாவின் அரசியலமைப்பின் மீதான நேரடி தாக்குதலாக இந்த மசோதா உள்ளது. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கொள்கையை மீறும் வகையில் குடியுரிமை மசோதா அமைந்துள்ளது” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதேபோல, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனும் குடியுரிமை மசோதாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவால் நமது ஜனநாயகம் பெரும் ஆபத்தில் உள்ளது. சங்பரிவார் தனது பெரும்பான்மை பலத்தை வைத்து நாட்டின் அரசியலமைப்பை ஆட்டிப்படைக்கிறது. பா.ஜ.க மதவாதத்தை மட்டுமே கொள்கையாக கொண்டு செயல்படுகிறது. இதனை நாம் எதிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பா.ஜ.கவின் குடியுரிமை மசோதாவை தங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என்றும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் இது தொடர்பாக பேசியபோது, “குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டையே பின்பற்றுவோம்” எனக் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories