மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க கடந்த ஆட்சியில் நிறைவேற்ற முடியாமல் போன குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை, பெரும்பான்மை பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.
இந்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும் அமல்படுத்தப்பட்ட இந்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி திரிபுரா மற்றும் அசாம் மாநில மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்து நாடு முழுவதும் உள்ள ஜனநாயக அமைப்பினர் மோடி அரசிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பையைச் சேர்ந்த மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து உருது மொழிபெயர்ப்பாளரும், மூத்த எழுத்தாளரும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் உருது துறைத் தலைவருமான பேராசிரியர் யாகூப் யாவர், உத்தர பிரதேச உருது அகாடமியிலிருந்து பெற்ற அகாடமி விருதை திருப்பித் தருவதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக அவர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், “எனது விருதை திருப்பி அளிப்பது தொடர்பான கடிதத்தை, அகாடமிக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதில் உ.பி. உருது அகாடமியால் வழங்கப்பட்ட 1 லட்சம் ரூபாயை காசோலையின் மூலம் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.
மேலும் பேசிய அவர், “நான் வயதானவன், என்னால் தெருவில் இறங்கிப் போராட முடியாது. விருதைத் திருப்பியளிப்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாது, ஆனாலும் அமைதியாக இருக்க என் மனசாட்சி என்னை அனுமதிக்காது. குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான தனது எதிர்ப்பை காட்ட நான் செய்ய முடிந்தது இதுதான்” எனத் தெரிவித்தார்.