மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களில் அதிகளவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தின் உற்பத்தி இந்த ஆண்டு குறைந்ததால் அதன் மீதான விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்தது
இதனால் கிலோ ஒன்றுக்கு 200 ரூபாய்க்கு மேல் விற்கப்படுவதால் அன்றாட உபயோகத்துக்கு இல்லத்தரசிகள் வெங்காயத்தை வாங்குவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், துருக்கி மற்றும் எகிப்து நாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்து விற்பனைக்கு விடப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, எகிப்து நாட்டில் இருந்து சுமார் 40 ஆயிரம் டன் வெங்காயம் மும்பை துறைமுகத்துக்கு வந்தடைந்தது. அதன் பிறகு வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கு வெங்காயம் பிரித்து அனுப்பப்பட்டது.
இந்த எகிப்து வெங்காயம் பார்ப்பதற்கு பீட்ரூட் அளவுக்கு பெரிதாகவும் சிவப்பு நிறத்தில் உள்ளது. ஒரு வெங்காயம் ஒன்று 500 கிராம் அளவுக்கு எடைக்கொண்டதாகவும் உள்ளது.
இருப்பினும் சில அதீத ஆசைக் கொண்ட வியாபாரிகள் தங்களிடம் உள்ள வெங்காயத்தை விற்றுத் தீர்ப்பதற்காக எகிப்து வெங்காயத்தில் நீர்ச்சத்து குறைவாக உள்ளது என பொய்யாக விளம்பரம் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
உண்மையில், எகிப்து வெங்காயம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கக் கூடியது என பல ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதனால் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாததால் எகிப்து வெங்காயத்தை வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும், எகிப்தில் இருந்து வெங்காயம் வரவழைக்கப்பட்டாலும் விலையோ இன்னும் 100 ரூபாய்க்கு கீழே இறங்கவில்லை. இதன்காரணமாகவும் எகிப்து வெங்காயத்தை வாங்க மக்களிடம் தயக்கம் நிலவி வருகிறது.