மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றார். இதனையடுத்து, பல மாதங்களாக தலைமறைவாக இருந்த நீரவ் மோடி லண்டனில் இருப்பதை மத்திய அரசு கண்டுபிடித்தது.
இந்திய அரசின் அறிவுறுத்தல்படி, லண்டன் போலிஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இந்தியாவில் நீரவ் மோடியின் மோசடி குறித்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
அதனிடையே, கடந்த 5-ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, கடனை செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற நீரவ் மோடியை ‘பொருளாதாரக் குற்றவாளி’ என அறிவித்து மும்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து தற்போது 2,400 கோடி ரூபாய் மதிப்பிலான நீரவ் மோடியின் சொத்துகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விடும் முயற்சியில் அமலாக்கத்துறை இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது தொடர்பான அமலாக்கத் துறையின் விண்ணப்பத்தை மும்பை நீதிமன்றம் வரும் ஜனவரி 10-ம் தேதி விசாரிக்க உள்ளது.
அதுமட்டுமின்றி 5-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, நீரவ் மோடி, அவரது சகோதரர் நீஷால் மோடி, சுபாஷ் பார்ப் மூவரும் வரும் ஜனவரி 15-க்குள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறினால் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் மும்பை நீதிமன்றம் எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.