கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட தெலங்கானா மாநிலத்தில் கால்நடை பெண் மருத்துவர் லாரி ஓட்டுநர்களால் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக்கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய குற்றவாளிகள் 4 பேரையும் போலிஸார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிகளிக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி கூறச் சென்ற இளம்பெண்ணை ஜாமீனில் வெளிவந்த குற்றவாளி மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து கடுமையாகத் தாக்கி தீயிட்டு கொளுத்தினார்கள்.
இதில் 90 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்றுவந்த அந்த இளம்பெண் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவங்கள் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கk கோரி பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேரளாவிற்குச் சென்றுள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “இந்த நாட்டை ஆள்பவர்கள் வன்முறையை நம்புகின்றனர். அதனால் பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக்கொள்கின்றனர்.
மேலும், நாட்டில் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாலியல் வன்கொமை செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறுகின்றன.
அதுமட்டுமின்றி, பாலியல் வன்கொடுமைகளின் தலைநகரமாக இந்தியா இருப்பதாகவும், இந்தியாவில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளை ஏன் பாதுகாக்கத் தவறுகிறீர்கள் என உலக நாடுகள் கேள்வி எழுப்புகின்றன.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ-வால் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தொடர்பாக பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை” என குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “நாட்டில் உள்ள சிறுபான்மையினர் மீதும், தலித் மக்களின் மீதும் திட்டமிட்டு வெறுப்புணர்வு பரப்படுவதாகவும், அதிலும் பழங்குடியின மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு அவர்களை துரத்திவிடும் வேலையை இந்த அரசாங்கம் செய்வதாகவும்” தெரிவித்தார்.