கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வாளையார் அட்டப்பள்ளத்தைச் சேர்ந்த தம்பதி ஷாஜி - பாக்கியம். இவர்களுக்கு இரண்டு மகள்கள். இவர்களின் இரண்டு மகள்களும் கடந்த 2017ம் ஆண்டு 2 மாத இடைவெளியில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்தனர்.
முன்னதாக, உயிரிழந்த சிறுமியின் தங்கை போலிஸாரிடம் இரண்டு நபர்கள் முகமூடியுடன் அப்பகுதியில் சென்றதாகக் கூறியுள்ளார். ஆனால், அதுதொடர்பான புகாரில் போலிஸார் எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சிறுமியின் தங்கையும் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்த சம்பவம் மாநிலத்தையே உலுக்கியது.
பின்னர், இதுதொடர்பான வழக்கில் சிறுமியின் அம்மா வழிவந்த உறவினர் மது, தந்தையின் நண்பர் ஷிபு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மற்றொருவர் என 3 பேரையும் போலிஸார் கைது செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதுதொடர்பான வழக்கு விசாரணை 3 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில், சமீபத்தில் கேரளா உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்ற்த்திற்கான போதிய முகாந்திரம் இல்லை என குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரையும் விடுதலை செய்தது.
விடுதலையான பின்னர் மது என்பவர் கேரளாவில் சுதந்திரமாக சுற்றித் திரிந்துள்ளார். இந்நிலையில், மது இன்று அட்டப்பள்ளம் கடைவீதி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அங்கு திடீரென வந்த 10 பேர் கொண்ட கும்பல் மதுவை தாக்க முயன்றுள்ளனர்.
இதனைப் பார்த்து பயத்தில் ஓடிய மதுவை, அந்த கும்பல் வளைத்து பிடித்து தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். தாக்குதலின் போது வலி தாங்காமல் நிலைகுலைந்து மது கீழே விழுந்தார்.
இதனையடுத்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த வாளையார் போலிஸார், மதுவை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலிஸார் சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்தியவர்களை தேடி வருகின்றனர். இரண்டு சிறுமிகள் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.