மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதனால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் எதிர்பார்த்த அளவை விட குறைவாக உள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜி.எஸ்.டி வரி வசூல் முறையை அமல்படுத்தி வணிகர்களை கடும் நெருக்கடியில் சிக்க வைத்தது. அதனால், ஜி.எஸ்.டி வரி வருவாய் கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூபாய் 91 ஆயிரத்து 916 கோடியாகக் குறைந்துள்ளது.
இந்த பொருளாதார மந்தநிலையால் போதிய வரி வசூல் கிடைக்காமல் மாநிலங்களுக்கு நிதியளிக்கமுடியாத நிலைக்கு மத்திய அரசு சென்றது. இதனால் வரி விதிப்பில் மாற்றம் செய்யப்படாது என ஜி.எஸ்.டி கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
ஆனால் தற்போது ஏற்படுள்ள மந்தநிலையை ஈடுகட்ட வரிவிதிப்பில் மாற்றம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக வரி விதிப்பில் மாற்றம் செய்ய ஜி.எஸ்.டி கவுன்சிலிடம் பல மாநிலங்கள் பரித்துரைத்ததாகவும், அதனடிப்படையில், குறைந்த பட்ச வரிவிகிதமான 5 சதவீதத்தை 9 லிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்போவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் 12 சதவீத வரிவரம்பை நீக்கிவிட்டு, அதற்கு 243 பொருட்களுக்கு 18 சதவீதமாக வரியை நிர்ணயம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுவதாகவும் கூறப்படுகிறது. அதனால், கூடுதலாக 1 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருப்பதற்கு ஜிஎஸ்டி-தான் முக்கியக் காரணம் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் பிபேக் தேப்ராய் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.