மருத்துவத் துறையில் சிறந்த சேவை புரியும் செவிலியர்களுக்கு மத்திய அரசு சார்பில் 'ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்' விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அந்தவகையில், நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டில் உள்ள 36 சிறந்த செவிலியர்களுக்கு இந்த விருதை வழங்கியுள்ளார்.
அதில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த லினி புத்துசேரி என்ற செவிலியரும் ஒருவர். இவர், கடந்த ஆண்டு கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிரைப் பணயம் வைத்து சிகிச்சை அளித்தவர்.
தொற்றுநோய் என்பதால், நோயாளிகளுக்கு இருந்த நிபா வைரஸ் செவிலியர் லினியையும் தாக்கியதால் அவரும் அந்தக் கொடிய வைரஸ் காய்ச்சலுக்கு ஆளாகினார். அதன் பிறகு கடந்த ஆண்டு மே மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நோய் தாக்கும் என அறிந்தும் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த லினியின் சேவையை பாராட்டும் வகையில் அவருக்கும் மத்திய அரசின் ‘ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல்’ விருது வழங்கப்பட்டது. லினி சார்பில் அவரது கணவர் சஜீஷ் அவ்விருதினை பெற்றுக்கொண்டார்.