தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா கடந்த நவம்பர் 27-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 4 லாரி ஓட்டுநர்களை போலிஸார் இன்று அதிகாலையில் விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது போலிஸாரின் பாதுகாப்பில் இருந்து 4 பேரும் தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அவர்கள் தப்பியோடுவதை தடுக்கமுடியாத நிலையில் போலிஸார் 4 பேரையும் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த என்கவுன்டர் நடவடிக்கைக்கு பின்னணியில் சைபராபாத் போலிஸ் கமிஷனர் சி.வி.சஜ்ஜனார் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த என்கவுண்டர் போலவே சி.வி.சஜ்ஜனார் கடந்த 2008-ம் ஆண்டு 3 குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தார். ஆந்திரா மாநிலத்தின் வாராங்கல் பகுதியில் ககாதியா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி என்ற பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வந்தது. அக்கல்லூரியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் மீது இளைஞர்கள் 3 பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.
இந்தத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த மாணவிகள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் கொதித்தெழுந்த மக்கள், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும் எனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் பின்னர், வாராங்கல் போலிஸார் குற்றவாளிகள் 3 பேரையும் கைது செய்ததாக அறிவித்தனர். கைது செய்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே, “குற்றவாளிகள் ஆயுதத்தைக் கொண்டும், ஆசிட் வீசியும் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக மூவரையும் சுட்டுக் கொன்றனர்” எனச் செய்தி வெளியிட்டனர்.
அப்போது ஆந்திராவின் வாராங்கல் மாவட்ட இளம் போலிஸ் சூப்பிரண்டாக இருந்தவர் வி.சி.சஜ்ஜனார். அவர் தலைமையில்தான் இந்தச் சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வெளியாகின. அதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரைக் கொன்ற சஜ்ஜனாருக்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவருக்கு மாலை அணிவித்து, பூங்கொத்து வழங்கினர். மேலும் உற்சாகத்தில், அவரை தோள்களில் ஏற்றிக்கொண்டு வலம் வந்தனர்.
இந்தச் சம்பவம் ஆந்திர காவல்துறையின் வரலாற்றில் அரிதான சம்பவமாக பார்க்கப்பட்டது. அந்த சம்பவத்திற்கு பிறகு அதிகாரிகள் மற்றும் சக போலிஸார் சஜ்ஜனாரை ‘சைலண்ட் ஆபரேட்டர்’ என்றே அழைத்தனர்.
அதனையடுத்து தற்போது சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், சைபராபாத்தின் போலிஸ் கமிஷனருமான சஜ்ஜனார் மீண்டும் இதேபோன்ற சைலன்ட் ஆபரேஷனில் ஈடுபட்டுள்ளார்.
பெண் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொலை வழக்கில் தொடர்புடைய நால்வர் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் அதிகாலையில் இருந்து பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அப்பகுதியில் பள்ளி வேனில் சென்ற மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பெண்கள் பலர் தெலங்கானா போலிஸாருக்கு சகோதரத்துவத்தை வெளிப்படும் வகையில் ராக்கி கட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த என்கவுன்டர் மனித உரிமை மீறலாக இருந்தாலும் கூட பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.