கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஏற்படுத்திய பெரும் அரசியல் குழப்பத்தால் காங்கிரஸ்-ம.ஜ.த அரசு கலைக்கப்பட்டு பா.ஜ.க ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில் குதிரை பேரம் நடத்தி காங்கிரஸ் - ம.ஜ.த எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் 15 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் அப்போதை சபாநாயகர்.
எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பளித்ததை அடுத்து 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதனையடுத்து, கர்நாடகாவின் காக்வாட், அதானி, கோகக், யெல்லபுரா, ராணிபென்னூர், விஜயநகர, சிக்கல்பல்லபுரா உள்ளிட்ட 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. 15 சட்டமன்றத் தொகுதிகளில் 126 சுயேச்சைகள் உட்பட 165 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பெங்களூருவில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் 144 தடை உத்தரவு போடப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
15 சட்டசபை தொகுதிகளில் பா.ஜ.கவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் நேருக்கு நேர் மோதுகின்றன. அதேநேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் 12 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தேர்தலை முன்னிட்டு 2,800 போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று பதிவாகும் வாக்குகள் வருகிற 9ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த ஒருவர் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.