சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த முகாமில் வீரர்களிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தன்னுடன் பணியாற்றும் சக வீரர்களை சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து பாதுகாப்புப் படை தரப்பில் காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுப்பு வழங்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.