‘புல்புல்’ புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு 414.90 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் ஒடிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களை ‘புல்புல்’ புயல் புரட்டிப் போட்டது. இந்தப் புயலால் மேற்கு வங்கத்தில் 16 பேர் உயரிழந்தனர். சுமார் 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 14 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலம் நாசமடைந்தது.
இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கேள்வி நேரத்தின்போது பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “புல்புல் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என அடுத்தநாளே பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சரும் ட்விட்டரில் தெரிவித்தனர்.
ஆனால், இதுநாள் வரை மத்திய அரசிடம் இருந்து ஒரு பைசா கூட நிதியுதவியாக வரவில்லை. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு ஆய்வு செய்தது. அப்போது மாநிலம் முழுவதும் புயலால் 23,000 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பீடு செய்தது. வெறும் மதிப்பீடு மட்டும் தான், நிதி வரவில்லை.
மாநில அரசு தனது நிதியிலிருந்து 1,200 கோடி நிவாரண நிவாரணமாக வழங்கியது. அதிக இழப்புக்களை சந்தித்த விவசாயிகளுக்கு 5,000 நிவாரண நிதியாக வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.
மம்தாவின் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து, ‘புல்புல்’ புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநிலத்துக்கு 414.90 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படுவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து இந்தத் தொகை வழங்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மம்தா பானர்ஜி நேற்றைய தினம் சட்டமன்றத்தில் எழுப்பிய குற்றச்சாட்டினால் தான் மத்திய பா.ஜ.க அரசு நிவாரண நிதியை இன்று அறிவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர்.