நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை மாதம் சந்திரயான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம். வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கும்போது சுமார் 2.1 கி.மீ தொலைவில் தகவல் தொடர்பை இழந்தது சந்திரயான் 2ல் உள்ள விக்ரம் லேண்டர்.
பேரதிர்ச்சிக்கு ஆளான இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து லேண்டரின் செயல்பாடு குறித்து ஆர்பிட்டரின் துணையுடன் கண்காணித்து வந்தனர். இருப்பினும், அவை பலனளிக்காததால் நாசாவின் உதவியை நாடிய இஸ்ரோவுக்கு அந்தச் சமயத்தில் நாசாவாலும் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே விழுந்து கிடந்த விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா.
மேலும், விக்ரம் லேண்டர் விழுந்த இடத்தில் இருந்து வடமேற்கு திசையில் 750 மீட்டர் தொலைவில் அதன் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விக்ரம் லேண்டரின் நிலை குறித்து அவ்வப்போது நாசா வெளியிட்ட புகைப்படங்களை வைத்து ஆய்வு செய்துள்ளார் தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த சண்முக சுப்பிரமணியன்.
நாசாவின் புகைப்படங்களை வைத்து மேற்கொண்ட ஆய்வில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் நிலவில் இருக்கும் இடத்தை கண்டறிந்த சண்முக சுப்பிரமணியன், அதனை மெயில் மூலம் நாசாவுக்கு அனுப்பியுள்ளார். சண்முக சுப்பிரமணியன் அளித்த தகவலை உறுதி செய்த நாசா, அந்த இளைஞருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இவர் சென்னை தரமணியில் உள்ள நிறுவனத்தில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, சண்முக சுப்பிரமணியனின் செயலுக்கு பலர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும், விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த பெருமை தமிழகத்தைச் சேர்ந்த இளைஞருக்கு கிடைத்துள்ளது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.