தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் நடிகை சஞ்சனா. இவர் மாடலாகவும் தெலுங்கு சினிமாவில் நடிகையாகவும் இருந்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஐதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஹோட்டலுக்குச் சென்றுள்ளார்.
இவர் சென்றிருந்த இரவு அன்று, தெலங்கானா மாநில பா.ஜ.க இளைஞரணியைச் சேர்ந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தேஷ்வர் கவுடுவின் மகனுமான ஆஷிஷ் கவுடுவும் சென்றுள்ளார். அங்கு நடிகை சஞ்சனாவை சந்தித்த ஆஷிஷ் கவுடு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதனையடுத்து, நடிகை சஞ்சனா மந்தாப்பூர் காவல் நிலையத்தில், ஆஷிஷ் கவுடு மீது பாலியல் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார், ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது 354 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடைபெற்ற அன்று ஹோட்டலில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலங்கானாவில் கடந்த வாரத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து மற்றொரு பெண்ணும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்களுக்கு நாட்டு மக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர்.
மேலும், தெலங்கானாவில் பா.ஜ.க-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி, மாநில அரசுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியது. அந்தப் போராட்டம் ஆஷிஷ் கவுடு தலைமையில் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்மீது பாலியல் வன்கொடுமை செய்ததாக செய்திகள் வெளியானதுமே ஆஷிஷ் தலைமறைவாகியுள்ளார். ஆளும் பா.ஜ.க-வினராலேயே நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பலர் குற்றம் சாட்டிவருகின்றனர். இந்த சம்பவம் தெலங்கானா அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.