கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு வெங்காயத்தை அதிகளவில் உற்பத்தி செய்யும் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பெய்த தொடர் மழையால் வெங்காயப் பயிர்கள் அழிந்து உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருப்பு வைத்துள்ள வெங்காய மூட்டைகள் மழையில் நனைந்து அழுகியுள்ளது.
தற்போது பெரிய வெங்காயத்தை அடுத்து சின்ன வெங்காயத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. வெங்காய விலை அதிகரிப்பின் எதிரொலியாக உணவுப்பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், வெங்காயத்தின் பயன்பாட்டை குறைந்துள்ளதாக உணவக முதலாளிகள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றன. அதன் ஒருபகுதியாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக் கட்சியின் இளைஞரணியினர், மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை அடகுவைத்து வெங்காயம் கடனாக வாங்கிச் செல்லலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சமாஜ்வாதிக் கட்சியினர் கூறுகையில், ''வெங்காயத்தின் தொடர் விலை உயர்வுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் இதை செய்துவருகிறோம். ஆதார் அட்டை மட்டுமல்லாது வெள்ளிப் பொருட்களையும் அடகு வாங்கிக் கொண்டு வெங்காயத்தைக் கொடுத்து வருகிறோம்'' எனத் தெரிவித்தனர்.
அதேபோன்று, லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் வெங்காய விலை உயர்வைக் கண்டித்து மாநில சட்டப்பேரவைக்கு வெளியே ஒரு கிலோ வெங்காயத்தை ரூ .40-க்கு விற்றனர்.