இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக, நாட்டின் பொருளாதார வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்கிறது என பிரதமர் மோடியும் அவரது அமைச்சர்களும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், 2019-2020 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் ஜி.டி.பி. வளர்ச்சி ஆறாண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 ஆக குறைந்துள்ளது. கடந்த காலாண்டில் 5 ஆக ஜி.டி.பி வளர்ச்சி இந்த காலாண்டில் 4.5 ஆக குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ஜி.டி.பி வளர்ச்சி 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக 2012-2013 நிதியாண்டில் 4.3 இருந்ததே குறைந்த அளவு ஜி.டி.பி வளர்ச்சி ஆகும்.
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால் பொருளாதாரம் சீரழியும் என பொருளாதார வல்லுநர்கள் கூறிவந்தாலும் அதை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளவில்லை. இனியும் பொருளாதாரம் நன்றாக உள்ளதென மக்களை ஏமாற்றாமல், பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு தக்க நடவடிக்கை வேண்டும்.