டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் நாடாளுமன்ற எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, “மத்திய அரசு பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா உள்ளிட்ட லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்களை விற்க முடிவு எடுத்துள்ளது.
குறிப்பாக பொதுத்துறை நிறுவனங்கள் பிரதமர் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசவேண்டும்.
மேலும், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க பா.ஜ.க மிகவும் வெட்கக்கேடான முயற்சிகளை மேற்கொண்டது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியாவின் அரசியல் தலைவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
ஆனால் சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இது நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் வெட்கக்கேடான செயலாகும்” என்று கடுமையாக விமர்சித்தார்.