இந்தியாவில் ஆன்லைன் மூலம் பணப் பரிவர்த்தனைகள் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தொழிற்நுட்பம் எளிதாகி இருக்கும் அதே நேரம், ஆன்லைன் மற்றும் ஏ.டி.எம் பரிவர்த்தனைகளில் மோசடிகள் நாள்தோறும் அதிகரித்து வருகின்றன.
அந்த வரிசையில் ஹரியானா மாநிலத்தில் வனிக வளாகத்தின் பொதுமேலாளர் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து 1.85 லட்சம் ரூபாயை ஆன்லையன் மோசடி கும்பல் கொள்ளையடித்துள்ளது.
ஹரியான மாநிலம் குருகிராமத்தைச் சேர்ந்தவர் அர்விந்த் கபூர். இவர் அப்பகுதியில் உள்ள பிரபல ஆம்பியன்ஸ் மாலில் பொது மேலாளராக பணியாற்றிவருகிறார். கடந்த வாரம் இவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்புக் கொண்ட ஒரு நபர் பேடிஎம் நிறுவனத்தின் அதிகாரி பேசுவதாக பேசியுள்ளார்.
அப்போது, பேடிஎம் நிறுவனத்தின் சார்பில் பேசிய நபர் நீங்கள் பயன்படுத்தும், பேடிஎம் கணக்கில் தகவல் முழுமையாக இல்லை அதனை சரியாக பூர்த்தி செய்தால் மட்டுமே உங்கள் பேடிஎம் கணக்கை தொடர்ந்து பயன்படுத்த முடியும். இல்லையெனில் முடங்கிவிடும் என கூறியுள்ளார்.
இதனால் பதறிபோன அர்விந்த் கபூர், மோசடி நபர் சொல்வதுபோல செய்யும்படி ஒத்துக்கொண்டார். அதன்பிறகு அந்த மோசடி நபர் சொல்லியது போல் அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்துள்ளார். மேலும் தனது வங்கி கணக்கிலிருந்து 10 ரூபாய் பணம் பரிமாற்றமும் செய்திருக்கிறார்.
அப்போது செல்போன் நம்பருக்கு வந்த ஒ.டி.பி-யை பூர்த்தி செய்ததும் வங்கி கணக்கிலிருந்து சுமார் 1.85 லட்சம் பணம் எடுக்கப்பட்டதாக எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. உடனே வங்கி இருப்புத் தொகையை பரிசோதித்தப்போது கணக்கில் இருந்த 1.85 ரூபாய் கொள்ளைப்போனதும், தன்னிடம் பேசியவர் மோடி நபர் என்றும் தெரிந்துக் கொண்டார்.
பின்னர் குருகிராமம் சைபர் கிரைம் போலிஸாரிடம் இதுதொடர்பான புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.