நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களவையில் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பதிலளித்து பேசினார்.
அப்போது, “நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் கழிவறை மோசமாக சுகாதாரமின்றி இருப்பதாகவும், சில மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும், குறிப்பாக ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் போன்ற கிராம அரசு மருத்துவமனைகளில் கழிவறை வசதிகள் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேப்போல், நாடுமுழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 72,000 மருத்துவமனை கழிவறை வசதிகள் இல்லாமல் செயல்படுவதாகவும், 1,15,000 அரசு மருத்துவமனைகளில் ஆண் - பெண் நோயாளிகளுக்கு என தனித்தனி கழிவறை வசதிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சத்திஸ்கர், குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தான் கழிவறை வசதி மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “கடந்த 6 ஆண்டுகளாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவதாக கூறிவருகிறது. ஆனால் அதில் முன்னேற்றம் எதுவும் இல்லை என்பது மத்திய அமைச்சரின் இந்த தகவல் தெளிப்படுத்துகிறது.
அதுமட்டுமின்றி, திறந்தவெளி கழிப்பிடங்கள் அப்படியேதான் இருக்கின்றன. இந்தத் திட்டத்தின் நோக்கம் உயர்வானதாக இருந்தாலும் அது செயல்படுத்தப்பட்ட விதத்தில் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியிருக்கிறது. மோடி உட்பட பலரும் விளம்பரத்திற்காக மட்டுமே இந்த திட்டத்தை கையில் வைத்துள்ளதாக தெரிகிறது” என அவர் தெரிவித்தார்.