நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 18ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாட்டில் பொருளாதார மந்தநிலை மிகமோசமாக இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
பொருளாதார மந்தநிலையை சரி செய்ய மத்திய அரசு எடுத்த முயற்சிகள் குறித்து தி.மு.க மற்றும் காங்கிரஸ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். நேற்றைய தினம் இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
நாட்டில் பொருளாதார மந்தநிலை இல்லை என்றும், வளர்ச்சி விகித்தில் மட்டுமே குறைவு எனவும் அவர் கூறினார். மேலும் மந்தநிலை ஏற்படும் சூழ்நிலை வராது என்றும் எதிர்க்கட்சிகள் தான் வீண்பழி சுமத்துவதாகவும் பலத்த குரலில் தனது வாதத்தை முன்வைத்தார் நிர்மலா சீதாராமன்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில்களை எதிர்க்கட்சி எம்.பி-க்கள் காதுகொடுத்துக் கேட்டிருந்த வேளையில், அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்த பா.ஜ.க அமைச்சர்கள் சிலர் தூங்கி விழுந்த சம்பவம் நாடாளுமன்ற எம்.பி-க்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும், மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மகேந்திரநாத் பாண்டே தூங்கிவிழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
பொருளாதார சரிவால் நாட்டு மக்கள் கடும் இன்னல்களை சந்தித்துவரும் வேளையில் அமைச்சர்கள் சற்றும் பொறுப்புணர்வின்றி நாடாளுமன்றத்தில் தூங்குவது கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளது.