இந்தியாவின் நிதி தலைநகரமாக விளங்கும் மும்பை மாநகரில், கடந்த 2008ம் ஆண்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் உலக அளவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாகிஸ்தானின் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுறுவி 2008ம் ஆண்டு இதே நாளில் (நவ.,26) மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டனர்.
தாஜ் ஹோட்டல், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், ஓப்ராய் டிரைடெண்ட், நரிமன் ஹவுஸ், காமா மருத்துவமனை ஆகியவற்றை இலக்காக வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். 60 மணிநேர முற்றுகைக்கு பிறகு, இந்த தாக்குதலில் 166 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 308 பேர் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்தனர். இதில், பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு எதிராக சண்டையிட்ட பாதுகாப்பு படை மற்றும் காவல்துறையினரும் இந்த பலியில் அடங்குவர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 10 பயங்கரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில் அஜ்மல் கசாப் என்ற இளம் தீவிரவாதியை மட்டும் உயிருடன் கைது செய்து விசாரிக்கப்பட்டது. உரிய விசாரணைக்கு பின்னர், கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி அஜ்மல் கசாப் புனே எரவாடா சிறையில் தூக்கிலிடப்பட்டான்.
இந்நிலையில், மும்பை தாக்குதல் நடைபெற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில், அதன் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலிஸாருக்கு தாக்குதலில் உயிர்நீத்த பாதுகாப்பு படையினர் மற்றும் போலிஸாருக்கு மெரின்ட்ரைவ் போலிஸ் ஜிம்கானா பகுதியில் உள்ள நினைவிடத்தில் இன்று ஆளுநர் கோஷ்யாரி மரியாதை செலுத்தினார்.