அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; எதிரி ஆதரவாளராகவும், ஆதரவாளர் எதிரியாகவும் மாறலாம். ஆனால், கட்சியின் மனசாட்சியாக இருந்தவர்கள் பதவிக்காக கட்சியை மீறி தலைவரை மீறி செயல்படுவது இந்திய அரசியலில் மீண்டும் நிகழ்ந்திருக்கிறது.
மகராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி சரியாக ஒரு மாத காலத்திற்குப் பிறகு கூட்டணி ஆட்சி அமைந்திருக்கிறது. சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று நேற்று இரவு வரை சொல்லப்பட்ட நிலையில் இன்று காலை மகாராஷ்டிரா ராஜ் பவனில் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.
செய்தித்தாள்களின் தலைப்புகளை மக்கள் பார்க்கும் முன்னரே, மகாராஷ்டிரா அரசியலின் தலைப்புச் செய்திகளை மாற்றி இருக்கிறார் அஜித் பவார். மகாராஷ்டிரா தேர்தல் நடக்க இருந்த நிலையில் 25,000 கோடி ஊழல் வழக்கில் சரத் பவார், அஜித் பவார் ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யவே, அஜித் பவார் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவர் தான் தற்போது பா.ஜ.க உடன் இணைந்து துணை முதல்வர் பதவியை ஏற்றிருக்கிறார்.
சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இடையே பல கட்டங்களாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வந்தன. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவராக அஜித் பவார் தேர்வு செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அஜித் பவார் 35 தேசியவாத காங். எம்.எல்.ஏ-களுடன் பிரிவதாக செய்திகள் முன்னரே வெளியாகின. ஆனால் கூட்டணி முடிவுகள் இறுதியானது குறித்து நேற்று மாலை சரத் பவார் பேசி இருந்தார்.
இந்தக் கூட்டணியில் அஜித் பவாருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்த நிலையில் நேற்று இரவு 8 மணி அளவில் தேசியவாத காங்கிரஸ் மாநில செயலாளர் சிவாஜிராவ் கர்ஜேவை தொடர்புகொண்டு எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் குறித்து விசாரித்து இருக்கிறார். அந்தக் கடிதத்துடன் தன்னை வந்து சந்திக்குமாறு கர்ஜேவிடம் அஜித் பவார் சொல்லியிருக்கிறார். மூன்று கட்சி கூட்டணி இறுதியாகி இருந்த நிலையில் அந்தக் கடிதத்தை அவரிடம் வழங்கி இருக்கிறார் கர்ஜே. சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி அமைக்க காலதாமதம் ஆன நிலையில் தான் இந்த முடிவை நோக்கி தான் சென்றதாக துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் அஜித் பவார் கூறியிருந்தார்.
1990-கள் தொடங்கி சரத் பவாரின் நிழலாக இருந்தவர்தான் இந்த அஜித் பவார். சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித் பவார், சரத் பவாருக்கு மிகவும் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த நிலையில் தற்போது கட்சிக்கு எதிராகவும், சரத் பவருக்கு எதிராகவும் செயல்பட்டு இருக்கிறார்.
இதே போல 2006ம் ஆண்டு கர்நாடகாவில் நிகழ்ந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனநாயக கட்சியில் 58 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை குமாரசாமி திரும்பப் பெற்று 46 பேரை பா.ஜ.கவிற்கு ஆதரவளிக்கச் செய்தார். இது தேவகவுடா உள்ளிட்ட பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தேவகவுடா தனது மகனின் இந்த முடிவை தான் ஆதரவளிக்க வில்லை என்றும் கூறியிருந்தார். அன்று தேவகவுடா கூறியதைத் தான் இன்று சரத் பவாரும் கூறியிருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் தரப்பிலிருந்த 54 எம்.எல்.ஏ-க்களில் 12 பேர் மட்டுமே அஜித் பவாருடன் சென்றிருந்த நிலையில் 5 பேர் திரும்பி வந்து இருக்கிறார்கள். இதனால், பா.ஜ.க அரசு பெரும்பான்மையை நிரூபிப்பது சிரமம் தான். மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றால் பா.ஜ.க-அஜித் பவார் கூட்டணி ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆக, மகாராஷ்டிரா அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.
- சி.ஜீவா பாரதி