ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்ட பாலத்திலிருந்து கார் ஒன்று விழுந்து நொறுங்கியது தொடர்பான சிசிடிவி காட்சி காண்போரை பதைபதைக்கச் செய்கிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் கச்சிபோலி பகுதியில் புதிதாக பாலம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதன் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் இன்று பிற்பகல் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று, பாலத்திலிருந்து விலகிச்சென்று கீழே உள்ள சாலையில் விழுந்தது.
சாலையில் கார் பறந்து வந்து விழுந்தபோது அதில் இருந்த ஏர் பேக் உடனடியாக செயல்பட்டதால் டிரைவர் உயிர் பிழைத்தார். சாலையோரம் ஆட்டோ ரிக்சாவுக்காக தனது மகளுடன் காத்திருந்த பெண் ஒருவர் கார் மோதி உயிரிழந்தார். டிரைவர் உட்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்துக்குள்ளான கார், மணிக்கு 104 கி.மீ வேகத்தில் வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் பாலத்தில் அதிகபட்சம் 40 கி.மீ வேகத்தில் செல்லவேண்டும் என விதி இருக்கிறது. விதியை மீறிச் சென்று விபத்துக்குள்ளாக்கி உயிர்ப்பலிக்கு காரணமாக இருந்த டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.
மேம்பாலத்திலிருந்து கார் பறந்து வந்து சாலையில் விழும் காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. காண்போரை பதைபதைக்கச் செய்யும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.