மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பா.ஜ.க எம்.பி., பிரக்யா சிங் தாக்கூர், பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனை குழுவில் இடம்பெற பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
2008ம் ஆண்டு மாலேகானில் மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்பில், 6 பேர் கொல்லப்பட்ட வழக்கில் பிரக்யா சிங் தாக்கூ ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் விடுவிக்கப்பட்ட இவர் பா.ஜ.க சார்பில் வெற்றிபெற்று எம்.பி ஆனார்.
பிரக்யா தாக்கூர் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதங்கள் மற்றும் வெடிக்கும் பொருட்கள் சட்டம் தொடர்புடைய வழக்குகளின் விசாரணை நிலுவையில் உள்ளன.
மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது மகாத்மா காந்தியைக் கொன்ற கோட்சேவை ‘தேசபக்தர்’ எனக் குறிப்பிட்டு சர்ச்சையில் சிக்கினார். இதுபோல இன்னும் பல சர்ச்சை பேச்சுகளுக்குப் பெயர் போனவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர்.
இவரது பெயர் மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கான பாராளுமன்ற ஆலோசனைக் குழு உறுப்பினராவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான 21 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்ற ஆலோசனைக் குழுவில் பரூக் அப்துல்லா, சரத் பவார் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவில் பிரக்யாவிற்கும் இடம் அளிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குண்டுவெடிப்பு வழக்குகளில் தொடர்புடையவருக்கு பாதுகாப்பு அமைச்சகத்தில் பதவி கொடுப்பதா எனக் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, பிரக்யா தாக்கூரை பாதுகாப்புத் துறைக்கு பரிந்துரைத்திருப்பது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் பா.ஜ.க தனது பரிந்துரையை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.