புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அரசு அதிகாரங்களில் தலையிட்டு பணிகளை செய்யவிடாமல் மாநில அரசின் பணிகளை முடக்குவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கிரண்பேடியின் அதிகார மீறல்களை எதிர்த்து நீதிமன்றம் வரை சென்றுள்ளார் அம்மாநில முதல்வர் நாராயணசாமி.
இந்நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102-வது பிறந்தநாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு இந்திரா காந்தியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, எந்த அதிகாரங்களும் இல்லாமல், அரசு அதிகாரிகளை மிரட்டும் வேலைகளில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஈடுபட்டு வருகிறார். மேலும் மாநில மக்களின் வளர்ச்சி பற்றி கவலைப்படாமல் புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் இடையூறு ஏற்படுத்தி வருவதாக அவர் குற்றம்சாட்டினார்.
முன்னதாக, அதிகாரிகளை தினந்தோறும் வசைபாடும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹிட்லரின் தங்கை போல செயல்படுகிறார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், பொது இடத்தில் தலைவர்களின் சிலைி வைக்கக்கூடாது என்று கிரண்பேடி கூறியதற்கு முதல்வர் நாராயணசாமி, சிலை வைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை அணுகுவோம், என்றும் விதிகளை மீறி நடக்கும் அதிகாரத்தில் உள்ளவர்கள் விரைவில் சிறை செல்வார்கள் எனவும் நாராயணசாமி கூறினார்.