பெரியார் குறித்து பாபா ராம்தேவ் தெரிவித்த கருத்துக்கு, தருமபுரி தி.மு.க எம்.பி., டாக்டர்.செந்தில்குமார் மக்களவையில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த பா.ஜ.க ஆதரவாளர் பாபா ராம்தேவ், அம்பேத்கர், பெரியாரின் ஆரவாளர்களைப் பார்த்தால் எனக்கு பயமாக இருக்கிறது. அவர்கள் எல்லாம் அறிவுசார் தீவிரவாதிகளாக உள்ளனர் என்கிற ரீதியில் பேசியிருந்தார்.
பாபா ராம்தேவின் இந்தப் பேச்சு நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ராம்தேவுக்கு கண்டனங்கள் குவிந்தன.
இதையடுத்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பாபா ராம்தேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில், “தந்தை பெரியார் சமூகத்தில் கீழ்நிலையில் உள்ள அடித்தட்டு மக்களுக்காகப் போராடினார். பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்தார். சாதி முறைக்கு எதிராக பேசினார். அவரது கொள்கைகளை தி.மு.க. பாதுகாக்கும்” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று இதுகுறித்து மக்களவையில் பேசிய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். செந்தில்குமார், “சமூக நீதி, சம உரிமை, பெண்ணுரிமை போன்றவற்றிற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் தந்தை பெரியார். பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த தலைவரை, தீவிரவாதி என்று பாபா ராம்தேவ் அழைப்பதை, எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.
பாபா ராம்தேவின் இந்தச் செயலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பெரியாரின் புகழைச் சிதைக்கும் வகையிலான கருத்துகளை தெரிவிக்க அனுமதிக்கக் கூடாது” என வலியுறுத்தினார்.