கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் எம்.டி.பி நாகராஜ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக மாறி, எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அதனாலேயே தகுதி நீக்கத்திற்கும் உள்ளானார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இடைத்தேர்தலில் போட்டியிடவும் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,களின் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்காக ஹோஸ்கோதே தொகுதி பா.ஜ.க வேட்பாளராக நாகராஜ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நாகராஜ் தேர்தல் ஆணையத்திடன் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில்,1200 கோடி ரூபாய் சொத்து மதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரது சொத்து மதிப்பு, கடந்த 18 மாதத்தில் மட்டும் 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது.
அதேபோல், அவரது மனைவியின் சொத்து மதிப்பு 44.95 கோடி அதிகரித்துள்ளது. நாகராஜ் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவருக்கும் மொத்தம் 1201.50 கோடி ரூபாய் சொத்து இருப்பதாகவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் - ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கான ஆதரவை அவர் வாபஸ் பெற்ற ஆகஸ்ட் மாதம் மட்டும் அவரது 53 வங்கிக் கணக்குளில் 48 கோடி ரூபாய் டெபாஸிட்டாக வந்துள்ளது.
எம்.எல்.ஏ.,வாக இருந்த ஒருவர் தனது பதவியை இழந்தபோதும் கடந்த 18 மாதத்தில் மட்டும் அவரது சொத்து மதிப்பு 185 கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்து இருப்பது பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இதன் மூலம் பா.ஜ.க.,வின் குதிரைபேரம் அம்பலமாகியுள்ளது என்றும், இதற்கான விசாரணையை நடத்தவேண்டும் என்றும் எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.