மஹராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள கல்வான் என்கிற கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் 6 வயது சிறுவன் தவறி விழுந்துள்ளான். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் உடனடியாக சிறுவனை மீட்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான். அவனை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
தற்போது சிறுவனின் உடல்நிலை இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்தனர்
முன்னதாக, கடந்த மாத இறுதியில், திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் என்ற குழந்தையை மீட்பதற்கு 82 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு, சுஜித் இறந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல ஹரியானா மாநிலத்தில் 50 அடி போர்வெல் குழியில் விழுந்த 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஒருமாத காலத்திற்குள் இந்தியாவில் 3 குழந்தைகள் ஆழ்துளை கிணறுகளில் சிக்கியுள்ளது. எனவே, நாடு முழுவதும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.