கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் கிளைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாகவும், ஆற்றுநீர் தங்களுக்கு உரியது, தமிழகம் உரிமை கோர முடியாது என கர்நாடகா தெரிவித்தது.
தென்பெண்ணையில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகா அரசு பெறவில்லை என்றும் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு செயல்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டத் தடையில்லை என தெரிவித்தது. மேலும், தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.