அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி, முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை நேற்று வழங்கியது.
”சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். இஸ்லாமியர்களுக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை உத்தர பிரதேச அரசு வழங்க வேண்டும். சர்ச்சைக்குரிய இடத்தில் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு தனியாக அறக்கட்டளை உருவாக்கி, நெறிமுறைகளை வகுக்கவேண்டும்.” என அரசியல் சாசன அமர்வு வெளியிட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் இந்தத் தீர்ப்பு இறுதியானதா அல்லது அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியுமா என்பது குறித்த சந்தேகங்கள் பொதுமக்களிடையே நிலவுகின்றன. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்கள் சொல்லும் கருத்தைப் பார்க்கலாம்.
உச்சநீதிமன்றமே நாட்டின் மிக உயரிய நீதி வழங்கும் அமைப்பு என்பதால் அதற்கு மேல் மேல்முறையீடு செய்ய முடியாது. ஆனால், சீராய்வு மனு தாக்கல் செய்யலாம். தீர்ப்பில் வழக்கின் குறிப்பிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளவில்லை என்றால் அவற்றைக் குறிப்பிட்டு சிவில் நடைமுறை சட்டப் பிரிவு, 114ன் கீழ் சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.
வழக்கில் ஏற்கனவே தீர்ப்பளித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தான், சீராய்வு மனு விசாரணைக்கு வரும். ஆனால், அயோத்தி வழக்கில், பல்வேறு தரப்புகளின் வாதங்களும் கருத்தில் கொள்ளப்பட்டு சமரசத்தை நோக்கிய தீர்ப்பாக இது வெளிவந்துள்ளது என்பதால் இந்தத் தீர்ப்பு மாற்றப்பட வாய்ப்புகள் குறைவு.
உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, சன்னி வக்ஃப் வாரியம், சீராய்வு மனு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடமிருந்தாலும், சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுவதற்கே அதிக வாய்ப்பு உள்ளதாக சட்ட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.