மகாத்மா காந்தி படுகொலை வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், “நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன், ஆனால் தேசபக்தன்” என்று கூறியிறுப்பார்கள் என காந்தியின் பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு வழங்கியுள்ளது.
அந்த தீர்ப்பில், வரலாற்று ஆதாரங்கள் மற்றும் தொல்லியல் துறை ஆய்வுகளின் அடிப்படையில் ராமர் கோயில் கட்ட முழு உரிமை மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
மேலும், 3 மாதங்களில் மத்திய அரசு அறக்கட்டளை அமைத்து கோயில் கட்டுவதற்கான நெறிமுறைகளை வகுக்க வேண்டும். அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கை விமர்சித்து ட்விட்டரில் காந்தியின் பேரன் துஷார் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது, “மகாத்மா காந்தி படுகொலை வழக்கை இன்று உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரித்திருந்தால், தீர்ப்பில் “நாதுராம் கோட்சே ஒரு கொலைகாரன், ஆனால் தேசபக்தன்” என்று கூறியிருக்கும் என பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு ட்வீட்டில், “தயவுசெய்து நம் தேசத்தை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கு திரும்புவோம்.” என்றும் துஷார் காந்தி ட்வீட் செய்துள்ளார்.