மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படும் அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
தீர்ப்பை வாசித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும். மத்திய அரசு உருவாக்கும் அறக்கட்டளை கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ளவேண்டும். சன்னி வஃக்பு வாரியத்துக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை அரசு அளிக்கவேண்டும்.” என உத்தரவிட்டார்.
அயோத்தி வழக்கின் இந்தத் தீர்ப்பு இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.
“அயோத்தியில் சர்ச்சைக்குள்ளான இடத்தில் கோயில் கட்டும் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்; இந்த தீர்ப்பானது கோயில் கட்ட வழிவகுத்ததோடு, பா.ஜ.க போன்ற கட்சிகள் இந்த விவகாரத்தை அரசியலாக்குவதற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.”
- ரந்தீப் சுர்ஜிவாலா, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்
“தீர்ப்பு நாங்கள் எதிர்பார்த்த வகையில் அமையவில்லை; உச்சநீதிமன்ற தீர்ப்பில் எங்களுக்கு சில கருத்து முரண்பாடுகள் உள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.”
- அனைத்து முஸ்லீம் சட்டவாரிய அமைப்பு
“ராமஜென்ம பூமி தொடர்பான உச்சநீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பை வரவேற்கிறேன்!”
- அமித்ஷா, பா.ஜ.க தலைவர்
“அயோத்தி வழக்கில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.”
- ராஜ்நாத் சிங், பா.ஜ.க
“அயோத்தி தீர்ப்பு எல்லோராலும் வரவேற்கப்பட வேண்டும். இந்த தீர்ப்பு சமூக நல்லிணக்கத்திற்கு உதவியாக இருக்கும். இதற்கு மேலும் இந்தப் பிரச்னையில் எந்த மோதலும் இருக்கக் கூடாது.”
- நிதிஷ் குமார், பீகார் முதல்வர்
“பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையிலோ, ஆதாரங்களின் அடிப்படையிலோ அளிக்கப்பட்டதாக தெரியவில்லை. சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு சமூக நல்லிணக்கத்தையும் கருத்தில் கொண்டு அளிக்கப்பட்ட சமரச தீர்ப்பாகவே தெரிகிறது.”
- தொல்.திருமாவளவன், வி.சி.க தலைவர்
“உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நாம் அனைவரும் முழு மனதுடன் வரவேற்கிறோம். இது யாருக்கும் கிடைத்த வெற்றி அல்ல, யாருக்கும் தோல்வி அல்ல. உணர்ச்சிவசப்பட வேண்டாம். நல்லிணக்கமும் அமைதியும் மேலோங்கட்டும்.”
- எடியூரப்பா, கர்நாடக முதல்வர்