பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-க்கள் விளம்பரத்திற்காகத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக் கருத்துகளைப் பேசி வருகிறார்கள். மேலும், பா.ஜ.க-வினர் அறிவியலுக்குத் துளியும் சம்பந்தம் இல்லாத வகையில் கருத்துகளைப் பேசுவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
அவ்வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தின் புர்வானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அம்மாநில பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், “இந்தியாவில் உள்ள பசுமாடுகள் தரும் பாலில் தங்கம் உள்ளது. அதனால்தான், பாலில் மஞ்சள் நிறம் உள்ளது. ஆனால், இந்த சிறப்பு வெளிநாட்டு மாடுகளின் பாலில் இல்லை. வெளிநாட்டு மாடுகளுக்கு திமில்கள் கிடையாது. இந்திய பசு மாடுகளுக்கு திமில் உள்ளது.
மாட்டின் திமிலில், உள்ள சுரப்பி சூரிய ஒளி படும்போது தங்கத்தை உற்பத்தி செய்கிறது. அந்தப் பாலை குடித்தால் தான் மனிதர்கள் உயிர்வாழ முடியும். எனவே, வெளிநாட்டுப் பசுக்களை வளர்க்காதீர்கள்” என்றார். மேலும், “மாட்டுக்கறியை உண்ணும் அறிவுஜீவிகள், ஏன் நாய்க் கறியையும் உண்ணக்கூடாது” எனக் கேள்வி எழுப்பினார். திலீப் கோஷின் இந்தப்பேச்சு கடும் சர்ச்சையைக் கிளப்பியது.
இந்நிலையில் மேற்கு வங்க தங்குணி பகுதியை சேர்ந்த ஒருவர் தனியார் நிதி நிறுவனத்திடம் இரண்டு மாடுகளை வைத்துக்கொண்டு எவ்வளவு நகைக் கடன் கொடுப்பீர்கள் எனக் கேட்டுள்ளார். இச்சம்பவம் நிதி நிறுவன ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த நபர், பசும்பாலில் தங்கம் உள்ளது என்ற பா.ஜ.க தலைவர் திலீப் கோஷின் பேச்சை நான் கேட்டேன். அதனால் தான் எனது இரண்டு பசுக்களுடன் நகைக் கடன் வாங்க வந்துள்ளேன்.
என்னிடம் மேலும் 20 பசுக்கள் உள்ளன. இந்த இரு பசுக்களை வைத்து எனக்கு கடன் கிடைத்தால் என்னுடைய தொழிலை பலப்படுத்த உதவியாக இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.