ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை தோற்கடித்து ஆட்சிக்கட்டிலில் ஏறியது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி.
முதலமைச்சராக பதவியேற்ற அக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் ரெட்டி, அம்மாநில மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து அதனை செயல்படுத்தியும் வருகின்றார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். அதில், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் பெயரை கலாம் திட்டத்துக்கு வைத்தது, அரசு அலுவலக கட்டடத்துக்கு அவர் கட்சியின் வண்ணம் அடித்தது என தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளானார் ஜெகன்மோகன்.
இவ்வாறு இருக்கையில், ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் புள்ளிவிவரம் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளார்.
அதில், கடந்த 5 மாதங்களாக ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் நிர்வாகத்தால் பொருளாதார குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது எனவும், அதனை சீரமைக்காமல் 15.65கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள வீட்டில் வீடியோ கேம் விளையாடுவதில் மும்முரமாக உள்ளார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குண்டூரில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் ஜன்னல் மற்றும் கதவு அமைப்பதற்காக ரூ.73 லட்சமும், அவர் வசிக்கும் ததேபள்ளி கிராமத்துக்கு சாலை அமைக்க ரூ.5 கோடியும், மின்சார செலவுக்கு ரூ.3.6 கோடியும், ஹெலிபேட் அமைக்க 1.89 கோடியும், முதலமைச்சர் மக்கள் சந்திப்பதற்காக மட்டும் கட்டப்பட்ட தனி இடத்துக்கு ரூ.82 லட்சமும் என கடந்த 5 மாதங்களில் சுமார் 15.65 கோடி ரூபாய்க்கு செலவிடப்பட்டிருப்பதாக சந்திரபாபு நாயுடு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.