தெலுங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் அப்துல்புரமேட் பகுதியில் தாசில்தாராகப் பணியாற்றி வந்தவர் விஜயா ரெட்டி. கடந்த சில நாட்களாக சுரேஷ் என்கிற விவசாயி நில பிரச்சினை தொடர்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து சென்று கொண்டிருந்தார்.
இன்றும் அவர் அலுவலகத்திற்கு வந்து தாசில்தார் விஜயா ரெட்டியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை திடீரென தாசில்தார் மீது ஊற்றித் தீ வைத்து எரித்தார்.
தாசில்தாரின் அலறல் சத்தம் கேட்டு பணியில் இருந்த ஊழியர்கள் தாசில்தார் அறை கதவை திறந்து பார்த்த போது விஜயா ரெட்டி தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தார். தாசில்தார் மீது எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க அவர்கள் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது. சம்பவ இடத்திலேயே அவர் தீயில் கருகி பலியானார்.
பெண் வட்டாட்சியரை எரித்து கொன்ற சுரேஷ் போலிஸாரிடம் சரணைடைந்தார். இந்நிலையில், நிலப் பத்திர பதிவுக்கு வட்டாட்சியர் லஞ்சம் கேட்டதால் தான் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக விவசாயி சுரேஷ் தெரிவித்துள்ளார். அரசு அலுவலகத்தில் பெண் வட்டாச்சியரை உயிருடன் எரித்து கொன்ற சம்பவம் மாநிலம் முழுவதும் மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.