திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 5 நாள் மீட்பு போராட்டத்தை அடுத்து அழுகிய நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான்.
இந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித்தை லாவகமாக மீட்க பிரத்யேக கருவி ஏதும் இல்லாததால் சுஜித் உயிரிழக்க நேர்ந்தது.
சிறுவன் சுஜித்தின் மரணம் நம் மனதை விட்டு இன்னும் நீங்காத நிலையில், ஹரியானா மாநிலத்தில் 50 அடி போர்வெல் குழியில் விழுந்த 5 வயது சிறுமி, 18 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் கர்னால் என்ற பகுதியில் ஷிவாணி என்கிற 5 வயது சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தார். இதனை அடுத்து தீயணைப்பு படை, மீட்புப் படையினர் சிறுமியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கியிருந்த நிலையில், ஜே.சி.பி மூலம் பக்கவாட்டில் குழி தோண்டி சிறுமியை மீட்கும் முயற்சி நடந்தது.
இன்று காலை, சிறுமி மீட்கப்பட்ட நிலையில், உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மூடப்படாமல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளை மூட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.