இந்தியா

வாட்ஸ்அப் உளவு வேலைகளை மோடி அரசாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது! - மா.கம்யூ குற்றச்சாட்டு!

வாட்ஸ்அப் உளவு வேலைகளையெல்லாம் அரசாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

வாட்ஸ்அப் உளவு வேலைகளை மோடி அரசாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது! - மா.கம்யூ குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இஸ்ரேலி பெகாசஸ் உளவு மென்பொருள் மூலமாக கணினி வழியே சமூக ஆர்வலர்கள், வழக்குரைஞர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் நடவடிக்கைகள் களவாடப்பட்டிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,“வாட்சப்ஆப் நிறுவனம், இந்தியாவின் 40 பேர் உட்பட உலக அளவில் 1400 பேரின் தகவல்கள் குறிவைத்து கள வாடப்பட்டிருக்கிறது என்று ஒப்புக் கொண்டிருக்கிறது.

இது தனிநபர்களின் ஸ்மார்ட்போன் அல்லது கணினிகளில் உரிய அனுமதியின்றி ஊடுருவப்படுமானால் அது உச்சநீதிமன்றத்தால் வரையறுக்கப்பட்டுள்ள, தனிநபரின் அந்தரங்கங்கள் என்கிற அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். பெகாசஸ் போன்ற உளவு மென்பொருளைப் பயன்படுத்துவது, ஒருவரின் தனிப்பட்ட தரவு மற்றும் தகவல்களை அவருக்கும் தெரியாமல் சட்டவிரோதமாக சோதனை செய்வதற்கு இணையானதாகும்.

பெகாசஸ் மென்பொருளின் உரிமையாளர், இந்த மென்பொருளைத் தாங்கள் அரசாங்க ஏஜன்சிகளுக்கு மட்டும்தான் விற்கிறோம் என்று அறிவித்திருக்கிறார். இது இந்தக் களவு வேலைகளையெல்லாம், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் வழக்குரைஞர்களைக் குறிவைத்து, அரசாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வாட்ஸ்அப் உளவு வேலைகளை மோடி அரசாங்கம்தான் செய்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது! - மா.கம்யூ குற்றச்சாட்டு!

அரசாங்கம், தன்னுடைய ஏஜன்சி ஏதாவது இந்த வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதா என்பதற்குப் பதில் சொல்லியாக வேண்டும். சட்டத்தின்படி, மக்களுடைய தொலைபேசிகளை ஊடுருவுவது என்பது சைபர் குற்றமாகும். பெகாசஸ் மென்பொருளை அரசாங்கம் பயன்படுத்தவில்லை என்றால், பின் ஏன் அது இது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து, அதனை யார் பயன்படுத்துகிறார்கள் என்று புலனாய்வு செய்திடக் கூடாது?.

மத்திய உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சைபர் மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவு பெகாசஸ் மென்பொருளை வாங்கவில்லை என்று கூறி மறுத்திருக்கும் அதே சமயத்தில், அரசாங்கம் தன் கீழ் இயங்கும் என்.டி.ஆர்.ஓ, சி.பி.ஐ அல்லது ஆர்.ஏ.டபிள்பு (NTRO, CBI, RAW) போன்று வேறெந்த துறையும் வாங்கவில்லை என்று இன்னமும் தெரிவிக்கவில்லை.

இந்தப் பிரச்சனை மீது கிரிமினல் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் குடிமக்களின் அந்தரங்கம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் வண்ணம் ஓர் ஒருங்கிணைந்த தரவு பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும்” என அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கோரியுள்ளது.

banner

Related Stories

Related Stories