டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. வழக்கறிஞர்கள், போலிஸார், பொதுமக்கள் என்று தினமும் ஆயிரக்கணக்கானோர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், நீதிமன்ற வளாகத்தில் இன்று போலிஸாருக்கும் வழக்கறிஞர்கள் சிலருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நீதிமன்றம் எதிரே வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக வழக்கறிஞர்கள் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் போலிஸ் வாகனங்களை அடித்து நொருக்கினர். ஒரு வாகனம் தீவைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வழக்கறிஞர் ஒருவர் காயமடைந்தார்.
இதனையடுத்து நூற்றுக்கணக்கில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி போராட்டம் நடத்திவருகின்றனர். இதனால் போலிஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு பதட்ட நிலை தொடர்கிறது. நீதீமன்ற வளாகத்துக்குள் புகுந்து போலீஸ் துப்பாகிச் சூடு நடத்தியதில் காயமடைந்த வழக்கறிஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.