இந்தியா

“இந்திய சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மைதான்”: ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்- வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் வாட்ஸ் அப் தகவல்கள் உளவு பார்க்கப்படுவதாக வெளியான குற்றச்சாட்டை வாட்ஸ்அப் நிறுவனமும் ஒப்புக் கொண்டுள்ளது.

“இந்திய சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மைதான்”: ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்- வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் கூட்டாட்சி நீதிமன்றத்தில் கடந்த வாரத்தில் இஸ்ரேலிய என்.எஸ்.ஓ நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸ்அப் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் பெகாசுஸ் என்ற மென்பொருள்கள் மூலம் இந்திய மக்களின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்ப்பததாக தெரிவித்துள்ளது. மேலும் வீடியோ கால் தொடர்பு மூலம் அந்த மென்பொருளை உளவு பார்ப்பவர்களின் செல்போன்களில் இறக்கிவிடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதில், ஒருவேளை அந்த வீடியோ கால் அழைப்பை தொடர்புடைய நபர் ஏற்கவில்லை என்றாலும் அந்த மென்பொருள் செல்போனில் தங்கிவிடும் என்றும், அதன் மூலம் செல்போனில் உள்ள மற்ற தகவல்களை பெற முடியும் என்றும் கூறியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், குரல் பதிவு, முக்கிய தரவுகளுக்குப் பயன்படுத்தப்படும் பாஸ்வேர்ட், வீடியோ கால் பதிவு, கேமரா பதிவு என அனைத்தையும் பெற்றுவிட முடியும் எனக் கூறுகின்றனர்.

“இந்திய சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மைதான்”: ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்- வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்த பெகாசஸ் மென்பொருள் ஸ்கைப், பேஸ்புக் மெசஞ்சர், வாட்ஸ்அப் என சமூக வலைதளங்களுக்குள் புகுந்து உளவு பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனையடுத்து, தனது பயணர்கள் சுமார் 1,400 பேர் பெகாசஸ் மென்பொருள் மூலம் தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டியிருக்கிறது. மேலும் சட்டங்களை மீறியதாகவும், வாட்ஸ்அப் விதிமுறைகளை துஷ்பிரயோகம் செய்ததாகவும் வாட்ஸ் அப் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேலும், பெகாசஸ் மென்பொருளை தயாரித்த இஸ்ரேலின் என்.எஸ்.ஒ நிறுவனம் இந்திய மதிப்பில் 53 லட்சம் ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் உளவு பார்ப்பதாக வெளியான தகவலை அடுத்து வாட்ஸ்அப் நிறுவனம் தனது பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

“இந்திய சமூக ஆர்வலர்கள் உளவு பார்க்கப்பட்டது உண்மைதான்”: ஒப்புக்கொண்ட வாட்ஸ்அப்- வெளியான அதிர்ச்சி தகவல்!

இதுபோன்று இனி நடைபெறாமல் இருக்க புதிய கட்டுப்பாடு அம்சங்களை உருவாக்கி இருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இந்த கண்காணிப்புக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கையையும், அவர்களின் அடையாளங்களையும் வெளிப்படுத்த வாட்ஸ்அப் மறுத்துவிட்டது.

இதனையடுத்து இந்த புகார் குறித்த உரிய விளக்கத்தை நவம்பர் 4ம் தேதிக்குள் வாட்ஸ் அப் நிறுவனம் அளிக்கவேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், புகாருக்கு விளக்கம் அளித்துள்ள என்.எஸ்.ஓ. நிறுவனம், நாங்கள் தயாரித்த உளவு மென்பொருளை அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறோம் எனத் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories