இந்தியா

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா மறைவு’- இடதுசாரி தலைவர்கள் இரங்கல்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா காலமானார். அன்னாரின் மறைவுக்கு இடதுசாரி கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா மறைவு’- இடதுசாரி தலைவர்கள் இரங்கல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸின் நீண்ட கால பொதுச் செயலாளருமான குருதாஸ் தாஸ் குப்தா காலமானார்.

வங்காள தேசத்தில் உள்ள பாரிசல் பகுதியில் நிகர்தேவி - துர்க்கா புரோசன்னா தாஸ் குப்தா தம்பதிகள் மகனாக தோழர் குருதாஸ் தாஸ் குப்தா 1936 நவம்பர் 03 ஆம் தேதி பிறந்தவர்.

பள்ளிக் கல்வியை முடித்து, கொல்கத்தா அஷ்தோஷ் கல்லூரியில் எம்.காம் (முதுநிலை வணிகவியல்) பட்டப்படிப்பு முடித்தவர். கல்லூரி மாணவர் பருவத்தில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இளைஞர் பெருமன்றம் என அமைப்புகளில் இணைந்து போராட்டப் பொது வாழ்க்கையில் பயணத்தைத் தொடங்கியவர்.

இதன் தொடர்ச்சியாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயல்பட்டு, அதன் தேசிய செயற்குழு உறுப்பினர் நிலைக்கு பணியாற்றியுள்ளார். ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் பொறுப்பில் செயல்பட்டு, மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைந்த, ஒன்றுபட்ட நடவடிக்கைக்கு அடித்தளம் அமைத்ததில் பங்கு வகித்தவர்.

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1985 முதல் 2003 வரை செயலாற்றியவர். மேற்கு வங்க மாநிலம் பான்ஸ்குரா மற்றும் காட்தல் மக்களவைத் தொகுதிகளில் இருந்து, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு மிகச் சிறப்பாக செயல்பட்டவர்.

குருதாஸ் குப்தா
குருதாஸ் குப்தா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்ற கட்சித் தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர். விவசாயத் தொழிலாளர் நிலை குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுத் தலைவராக இருந்தார்.

மேலும், ஹர்ஷத் மேத்தா பங்கு சந்தை ஊழல் மீதான விசாரணைக்கு அமைக்கபட்ட நாடாளுமன்றக் குழு உறுப்பினர் என பல்வேறு நிலைகளில் செயல்பட்டு வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பை செலுத்தியவர்.

மேற்கு வங்க மாநில விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர், இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் பொறுப்பில் பணியாற்றியவர். கடந்த 1965 ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஜெயசிரி தாஸ் குப்தாவை திருமணம் செய்து கொண்டார்.

அவரது மனைவியும், ஒரே மகளும் கொல்கத்தா பவானிபூரில் உள்ள அவரது இல்லத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குருதாஸ் தாஸ் குப்தா தனது 83 வயதில் இன்று காலை 6 மணியளவில் கொல்கத்தா மாநகரில் காலமானார்.

இரா.முத்தரசன்
இரா.முத்தரசன்

அவரின் மறைவுக்கு இடதுசாரிகட்சிகள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “தனது வாழ்நாள் முழுவதும் அடித்தட்டு மக்களுக்கும், உழைப்பாளி மக்களுக்கும், நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தன்னலமற்ற தலைவர் நம்மை விட்டு மறைந்தார் என்கிற செய்தியை நம் நெஞ்சம் ஏற்க மறுக்கின்றது.

ஏற்ற தாழ்வற்ற பொதுவுடமைச் சமுதாயம் காணத் துடித்த வங்கத்தின் சிங்கம் குருதாஸ் தாஸ் குப்தாவிற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு தனது வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்தார்.

மேலும், மூன்று தினங்களுக்கு துக்கம் மேற்கொள்வதுடன் அவர் உயர்த்தி பிடித்த செங்கொடிகள் அரைக்கம்பத்தில் தாழப்பறக்க விடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories