சமீபத்தில் பொருளாதாரத் துறைக்கான நோபல் பரிசுக்கு பொருளாதார அறிஞர்கள் அபிஜித் பானர்ஜி அவரது மனைவி எஸ்தர் டஃப்லோ மற்றும் மைக்கேல் கிரமர் ஆகிய மூன்று பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தியரான அபிஜித் பானர்ஜி இந்திய பெருளாதாரம் குறித்து கருத்துத் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக,“இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் இருப்பதாகவும், தற்போதைய புள்ளிவிவரங்களைப் பார்த்தால், விரைவில் மீட்சியடையும் என்று உறுதியாகக் கூற முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்துக்கு பலரும் ஆதரவு அளித்தாலும், பா.ஜ.க-வினர் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் அபிஜித் பானர்ஜி குறித்து இடது சார்பு உடையவர் என குற்றம் சாட்டினார். அதற்கும் அபிஜித் பானர்ஜி உரிய பதில் அளித்தார்.
இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடியை அபிஜித் பானர்ஜி சந்தித்தார். அந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் பானர்ஜி கூறியதாவது, “தற்போது நாட்டில் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், அதற்கு நாம் கவலைப்பட வேண்டும்.
அதில் நாம் இன்னும் விளிப்புணர்வுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் நாம் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையையே பின்பற்றி வருகின்றோம்” என்றார்.
மேலும், “வங்கித்துறையில் ஒருநாள் முன்னேற்றம் ஏற்பட்டால்; அடுத்தநாள் திடீரென நெருக்கடி ஏற்படுகிறது. நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னதாகவே அது ஏற்படாமல் தடுக்க வேண்டும். வங்கி கொள்கையில் முக்கியமான மற்றும் தீவிரமான மாற்றங்கள் செய்வது அவசியம் என நான் கருதுகிறேன்.
பொதுத்துறை வங்கிகளில் அரசானது தனது பங்கை 50 சதவீதத்துக்கும் கீழாக குறைக்க வேண்டும். அப்போது தான் அவை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் எல்லைக்கு வெளியே வர முடியும்.” என்று அறிவுரை வழங்கினார்.