தேசிய குற்றப் பதிவேடு ஆவண காப்பகம் (என்.சி.ஆர்.பி) நாடு முழுவதும் நடந்த குற்றச்சம்பவங்கள் குறித்த விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
குறிப்பாக, கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருள்கள் கடத்தல், குழந்தைகள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் குறித்த குற்றங்களின் வகைகள், அவை தொடர்பாக பதிவான வழக்குகள், வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் போன்ற விவரங்களை அதில் குறிப்பிடுகிறது.
அதில், கடந்த 2017 ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் தான் அதிக குற்றசம்பவங்கள் நடைபெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக நாடுமுழுவதும் பெண்களுக்கு எதிராக 3.5 லட்சம் குற்றங்கள் உள்ளபோது, உத்தர பிரசேத்தில் மட்டும் 56 ஆயிரத்து 11 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என பலரும் குற்றம்சாட்டி வரும் வேலையில் மத்திய அரசின் அறிக்கையிலேயே பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலம் முதல் இடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பா.ஜ.க அரசைக் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “உத்தர பிரதேசம்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இது வெட்கக்கேடானது.
பா.ஜ.க அரசு பெண்களை பாதுகாக்க போதிய நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே இந்த புள்ளிவிவரம் சொல்கிறது. இதுபோல குற்றச்சம்பவங்களை தடுக்க தீவிர நடவடிக்கையை பா.ஜ.க அரசு மேற்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.