பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அமைப்பினர் தேர்தல் நேரங்களில் சாதி - மதப் பற்றையும் தேசப்பற்றையும் கிளறிவிட்டு மக்களை உணர்வு ரீதியாகத் தாக்கி வாக்குசேகரிக்கும் வேலையை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோல கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தலின் போது ராணுவ நடவடிக்கை பா.ஜ.க ஆட்சியின் சாதனை எனக் கூறி தேர்தலில் வாக்குக் கேட்டனர். இதுஅப்பட்டமான தேர்தல் விதிமீறல் என்றாலும் தேர்தல் ஆணையம் பெரிய அளவிலான நடவடிக்கை எதுவும் எடுக்காதது பா.ஜ.க-வுக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
அதன்தொடர்ச்சியாக தற்போது மும்பையின் தானே தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நரேந்திர மேத்தாவை ஆதரித்து உத்தர பிரதேச பா.ஜ.க முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா பிரச்சாரத்தில் ஈடுட்டார்.
அப்போது பேசிய அவர், “ஜம்மு - காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க அரசு நீக்கிய பிறகு நடைபெறும் தேர்தல் என்பதால் ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவையாகப் பார்க்கப்படுகிறது” என்றார்.
மேலும் பேசிய அவர், “இந்தத் தேர்தலில் மக்கள் வாக்கு இயந்திரத்தில் தாமரை சின்னத்திற்கான பட்டனை அழுத்துவது என்பது, பிரதமர் மோடி, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், நரேந்திர மேத்தா ஆகியோருக்கு மட்டும் நல்லது செய்வதுமட்டுமின்றி, பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசுவதற்கும் ஒப்பானதாகும். இது இந்தியர்களின் உண்மையான தேசபக்தியை நிரூபிப்பதாகும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
மேலும், “இந்து கடவுள் லட்சுமி தாமரை மலரில்தான் அமர்ந்துள்ளார். தாமரை சின்னம்தான் வளர்ச்சியின் அடையாளம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற பேச்சுக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் அவரின் இந்த சர்ச்சைப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.