மோடியின் பா.ஜ.க அரசு, கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது மேற்கொண்ட தவறான பொருளாதார கொள்கைகளான ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றின் தாக்கம் இப்போதும் நீடித்து வருகிறது. இதனாலேயே இந்தியாவின் பொருளாதாரத்திலும், நாட்டின் வளர்ச்சியிலும் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்துக்கும் எந்த விளக்கமும் அளிக்காமல் நாட்டின் பொருளாதாரத்தில் எந்தச் சரிவும் ஏற்படவில்லை என்ற பாட்டையே பா.ஜ.கவின் அமைச்சர்கள் தொடர்ந்து பாடி வருகின்றனர். அதில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் விதிவிலக்கல்ல.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர் தி இந்து ஆங்கில நாளிதழில் பொருளாதாரம் தொடர்பாக கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்.
அதில், “இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதை பா.ஜ.க அரசு மூடி மறைத்து வருகிறது. ஆனால் அனைத்து துறைகளிலும் நிலவும் மந்தமான நிலையால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதை மக்கள் நன்றாகவே தெரிந்தும் புரிந்தும் வைத்துள்ளனர்.
நேருவின் பொருளாதார கொள்கைகளை ஏற்க மனமில்லாமல் பா.ஜ.க அரசு விமர்சனத்தை மட்டும் முன்வைத்து வருகிறது. பா.ஜ.கவினருக்கு என ஒரு தெளிவான பொருளாதார கொள்கை என்பதே இல்லை. தன்னுடைய நிலையான கொள்கை இன்னது என கூறமுடியாத ஒரு கட்சியாகவே பா.ஜ.க விளங்குகிறது.
நாட்டின் பலம் வாய்ந்த கட்சியாக மத்தியில் ஆட்சிக் கட்டிலில் பா.ஜ.க அமர்ந்திருந்தாலும், தன்னுடைய பொருளாதார கொள்கைகளால் அது தோல்வியையே சந்தித்துள்ளது. ஆனால் இந்த நிலையை உணராமல் வெற்று மறுப்பை மட்டுமே பா.ஜ.க கூறி வருகிறது.
தற்போது நிலவும் பொருளாதார மந்த நிலையைச் சரி செய்ய முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் நரசிம்ம ராவ் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை பின்பற்றுவதுதான் மோடி அரசுக்கு சரியான வழியாக அமையும். சிங் மற்றும் ராவின் பொருளாதார கட்டமைப்பு பா.ஜ.கவுக்கு தற்போது தக்க சமயத்தில் உதவக்கூடும்.
“சவால்களையும், கருத்துகளையும், விமர்சனங்களையும் ஏற்றக்கொள்ளவும், புரிந்துகொள்ளவும் பா.ஜ.க அரசுக்கு தொலைநோக்குப் பார்வை இல்லை” என்று பரகல பிரபாகர் தன்னுடைய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, “தன்னுடைய கட்சி தொடர்பாக கணவர் பிரபாகர் எழுதிய கட்டுரை தொடர்பாக பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை அடிப்படை சீர்த்திருத்தங்களை பா.ஜ.க அரசு செய்துள்ளது” எனக் கூறி ஜிஎஸ்டி, ஆதார் போன்றவற்றை பட்டியலிட்டுள்ளார்.