இந்தியாவில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு காரணமாக ஆட்டோமொபைல், உணவு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி வரி விதிப்பால் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளதால் அசோக் லைலேண்ட், மாருதி, மஹிந்திரா, போஷ் இந்தியா போன்ற பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன.
மேலும் பங்குச்சந்தை தொடர்ந்து சரிவைச் சந்திக்கிறது. அதனால் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை திரும்பப் பெறுகின்றனர். குறிப்பாக உலக அளவில் பொருளாதார போட்டித்திறன் குறியீட்டில் இந்தியா முன்பு இருந்த இடத்தில் இருந்து 10 இடங்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளதாக உலக பொருளாதாரக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக மட்டுமே இருக்கும் என்று உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. ஐ.எம்.எஃப் (IMF - International Monetary Fund ) எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது.
அதில், 2017 - 2018-ம் ஆண்டு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதி ஆண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டில் 2019 - 2020-ம் ஆண்டில், 6 சதவீதமாக சரியும் என தனது மதிப்பீட்டைத் தெரிவித்துள்ளது. அதுமட்டுல்லாமல், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் வரும் காலங்களில் வரிச் சலுகை, கடன் வழங்கல் அதிகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் 2021-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், 2022-ம் ஆண்டில் 7.2 சதவீதமாகவும் உயரும் என்றும் உலக வங்கி கணித்துள்ளது.
அதே அறிக்கையில், தெற்காசிய நாடுகளில் வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் 2019-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இந்தியாவை விட அதிகமாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலக சூழலின் காரணமாக தெற்காசியா முழுவதுமே இந்த ஆண்டு பொருளாதார மந்தநிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.