தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகளில் ஒன்றான மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங்கின் முறைசாரா சந்திப்பு அக்.,11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.
இந்த சந்திப்பின் போது ஜின்பிங்கும், மோடியும் மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று பகுதிகளுக்குச் சென்று அதனை பார்வையிட்டபடி இருநாட்டுத் தொடர்பு குறித்துப் பேசினர். இருநாட்டுத் தலைவர்களின் இந்த சந்திப்பில் இந்தியாவைச் சேர்ந்த இரு வெளியுறவுத் துறை அதிகாரிகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தனர்.
முதல் நாள் சந்திப்பின் போது மோடிக்கும், சீன அதிபருக்கும் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஐ.எஃப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளருமான (அரசியல் பிரிவு) மது சூதன். இவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்.
மற்றொருவர், இரண்டாம் நாள் சந்திப்பின் போது மோடி, ஜின்பிங்குடன் உடன் இருந்த இந்தியத் தூதரக அதிகாரி பிரியங்கா சோஹானி. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2012ம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்று இந்திய வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார்.
மராட்டி, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வல்லவராக உள்ள பிரியங்கா, 2016ம் ஆண்டு முதல் சீனாவுக்கான இந்திய தூதரகத்தில் பணியாற்றி வருகிறார். வெறும் மூன்றே ஆண்டுகளில் சீனாவின் அதிகாரப்பூர்வ மொழியான மாண்டரினை வெகு விரைவில் கற்று அதிலும் கைதேர்ந்தவராக வலம் வருகிறார்.
இவர்தான், மாமல்லபுரத்தில் மோடி ஜின்பிங்கின் இரண்டாம் நாள் சந்திப்பில் மொழிபெயர்ப்பாளராகச் செயல்பட்டுள்ளார். சீன அதிபர் ஜின் பிங் சென்னை வந்தது முதல் அவரை வரவேற்று அவரது இந்த பயணத்துக்கான பொறுப்பு அதிகாரியாகச் செயல்பட்டுள்ளார்.
சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரக முதன்மைச் செயலாளாராக அரசியல் பிரிவில் பணியாற்றும் பிரியங்கா சோஹானி வெளி விவகாரத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பிமல் சன்யால் விருது மற்றும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.