கர்நாடக மாநில முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான ஜி.பரமேஸ்வராவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த அக்டோபர் 10ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மருத்துவத் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் பல கோடி வருமான வரி ஏய்ப்பு செய்த புகாரில், பெங்களூரு மற்றும் தும்கூர் போன்ற இடங்களில் பரமேஸ்வராவ் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் சோதனை நடந்தது.
300 அதிகாரிகள் இந்த வருமான வரி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையில் 4.25 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பரமேஸ்வராவின் தனி உதவியாளர் ரமேஷ் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பரமேஸ்வராவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் ரமேஷிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் அவர் மரணமடைந்திருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதவியாளர் ரமேஷின் மரணத்துக்கு காரணம் என்ன என கர்நாடக போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது பா.ஜ.க அரசு தொடர்ந்து வருமான வரித்துறையை ஏவி வருவதாக குற்றம்சாட்டப்படுவது குறிப்பிடத்தக்கது.