பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
குறிப்பாக, மாருதி சுசுகி நிறுவனம் செப்டம்பர் 2019-ம் ஆண்டு வரையிலான கார் விற்பனை விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில் சுமார் 26 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
அதனைத்தொடர்ந்து, இந்தியாவில் வணிக சந்தையில் லாரி போன்ற வாகனங்களைத் தயாரிப்பத்தில் முன்னோடி நிறுவனமான செயல்படும் அசோக் லேலண்டு விற்பனையில் 55 சதவீத அளவிற்கு சரிவை சந்தித்து உள்ளதாக அன்மையில் தெரிவித்தது.
இந்நிலையில், பயணிகள் வாகன விற்பனை 23.69 சதவீதம் சரிவை சந்தித்துள்ளதாக வாகன உற்பத்தியாளர்கள், டீலர்கள் கவலையடைந்துள்ளனர். இதுதொடர்பாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் (சியாம்) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது, “கடந்த செப்டம்பரில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 23.69 சதவீதம் சரிந்து 2,23,317மாக உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பரில் இது 2,92,660 ஆக இருந்தது. இதுபோல் கார் விற்பனை 33.4 சதவீதம் குறைந்து 1,31,281 ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டு இது 1,97,124 ஆக இருந்தது.
மோட்டார் சைக்கிள் விற்பனை 23.29 சதவீதம் சரிந்து 10,43,624 ஆகவும், ஒட்டுமொத்த அளவில் டூவீலர்கள் விற்பனை 22.09 சதவீதம் குறைந்து 16,56,774 ஆகவும், வணிக பயன்பாட்டு வாகனங்கள் விற்பனை 39.06 சதவீதம் சரிந்து 58,419 ஆகவும், அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து ஒட்டுமொத்த வாகன விற்பனை 22.41 சதவீதம் சரிந்து 20,04,932 ஆகவும் உள்ளது” என சியாம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே ஆட்டோமொபைல் துறையில் விற்பனை சரிவால் பல லட்சம் பேர் வேலை பறிபோய்விட்டது. அதோடு, உற்பத்தியை குறைக்க உற்பத்தி நிறுவனங்கள் தொழிற்சாலைகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், பண்டிகை சீசனில் தள்ளுபடி அறிவித்தும் வாகன விற்பனை சரிந்துள்ளது விற்பனையாளர்கள், டீலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.